ரயில்-சாலை சுரங்கப் பாதைகள்: ஆராய அரசாங்கக் குழு

1 mins read
7d669121-f56a-4dc8-a01c-17be16b46fe0
கூட்டு ரயில்-சாலை சுரங்கப் பாதை. - மாதிரிப் படம்: பிடிஐ / இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைச் சீர்படுத்தவும் செலவைக் குறைக்கவும் ரயில் தண்டவாளப் பாதைகள், சாலைகள் ஆகியவற்றை ஒன்றாக நிலத்தடியில் அமைப்பது குறித்து ஆராயப்படுகிறது.

சம்பந்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆராய இந்திய அரசாங்கம், கூட்டுச் செயற்குழு (ஜேடபிள்யுஜி) ஒன்றை அமைத்துள்ளது. அக்குழுவில் சாலைப் போக்குவரத்து, விரைவுச்சாலை அமைச்சு, ரயில்வே அமைச்சு, என்எச்ஏஐ அமைப்பு உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இத்தகைய கூட்டு சுரங்கப் பாதைகளை அமைப்பதன் தொடர்பில் தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் அதிகாரிகள் குழு பரிந்துரைகளை முன்வைக்கும். அந்தப் பரிந்துரைகள் அனுமதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கூட்டு ரயில், சாலைச் சுரங்கப் பாதைகள் சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படுவதைக் கணிசமான அளவு குறைக்கலாம், நில ஆக்கிரமிப்பையும் கட்டுமானச் செலவையும் குறைக்கலாம், நிலத்தடிப் பகுதிகளை மேலும் நன்கு பயன்படுத்த வகைசெய்யலாம் என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக மக்கள்தொகை அதிகம் வசிக்கும் குறுகிய பகுதிகள், நிலத் தொடர்பு சார்ந்த சவால்களை எதிர்நோக்கும் வட்டாரங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட செலவு, செயல்பாடுகள் தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் போன்ற அம்சங்களையும் அரசாங்கக் கூட்டுச் செயற்குழு ஆராயும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்