நாட்டின் முதல் ‘ஹைட்ரஜன்’ ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்

நாட்டின் முதல் ‘ஹைட்ரஜன்’ ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல்

2 mins read
169f55c9-3adf-43f7-87fb-d44877997094
உலகத் தரத்துக்கு இணையாக இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. - கோப்புப் படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ‘ஹைட்ரஜன்’ ரயிலை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

உலகத் தரத்துக்கு இணையாக இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பயணிகளின் தேவை, எரிபொருள் சிக்கனம், மாசுக் கட்டுப்பாடு ஆகிய பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு வந்தே பாரத், அம்ரித் பாரத் எனப் பல்வேறு புதிய ரயில்கள் அறிமுகமாகியுள்ளன.

அந்த வகையில், தற்போது ‘ஹைட்ரஜன்’ ரயில் இயக்கப்பட உள்ளது. குறைந்த கரியமில வாயுவை வெளியிடும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் என்பதே இதன் முதன்மைச் சிறப்பம்சமாகும்.

கடந்த சில ஆண்டுகளாகப் பரிசீலனையில் இருந்துவந்த ‘ஹைட்ரஜன்’ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசு, கடந்த ஆண்டு வரவு-செலவு திட்ட அறிக்கையில் 35 ‘ஹைட்ரஜன்’ ரயில்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ரூ. 2,300 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணி கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

பத்து பெட்டிகள் தயாரான நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் முன்னிலையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் நாட்டின் முதல் ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் நகரில் இருந்து சோனிபேட் வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயிலின் எரிபொருள் தேவைக்காக ஹரியானாவின் ஜிந்த் நகரில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்