பெங்களூரு: இந்தியாவின் கொங்கன் ரயில்வே பாதையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த பயணி தண்டவாளத்தில் விழுவதை ரயில்வே ஊழியர் ஒருவர் தடுத்திருக்கிறார்.
கொங்கன் ரயில்வே பாதையில் உள்ள முர்தேஷ்வர் நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 22 வயதுப் பயணியை ரயில்வே ஊழியர் காப்பாற்றியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது. சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர், பலரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
கணபதி நாயக் என்ற அந்த ஊழியர், ஓடும் ரயிலிலிருந்து பயணி இறங்க முயற்சி செய்ததைக் கண்டிருக்கிறார். அந்தப் பயணி கேரளாவில் உள்ள கொச்சுவேலி நிலையத்திலிருந்து ராஜஸ்தானில் இருக்கும் ஸ்ரீ கங்காநகர் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் ரயிலிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது தடுமாறி தண்டவாளத்தில் விழவிருந்தார். சில வினாடிகளில் நாயக் அந்தப் பயணியிடம் அருகே விரைந்து சென்று அவரைத் தளமேடை இடைவெளியிலிருந்து காப்பாற்றினார்.
நாயக்கின் செயல் அந்த இளம் ஆடவரின் உயிரைக் காப்பாற்றியதாக நம்பப்படுகிறது. இந்திய ரயில்வே, நாயக்குக்கு 10,000 ரூபாய் ரொக்கம் வெகுமதியாக அளித்துள்ளது.

