புதுடெல்லி: குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’, ‘கதிமான் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட முக்கிய ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அதன்படி, தற்போது 160 கிலோமீட்டராக இருக்கும் வேக வரம்பு 130 கிலோமீட்டராகக் குறைக்கப்படும்.
அத்துடன், டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலிலுள்ள ராணி கமலாபதி நிலையத்திற்குச் செல்லும் சதாப்தி விரைவு ரயிலின் வேகத்தைக் குறைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதால், அதன் இயக்க நேரம் கிட்டத்தட்ட 25 முதல் 30 நிமிடங்கள்வரை அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
அண்மையில் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து எதிரொலியாகவும் நாடு முழுவதும் அதிகரித்து வரும் ரயில் விபத்துக்களை கருத்தில் கொண்டும் முக்கிய விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.