மும்பை: ரயில் நிலையக் குடிநீரில் நுண்ணுயிரித் தொற்று இருப்பதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) அறிக்கையில் வெளிவந்ததையடுத்து, நாடு முழுவதும் 20,000 இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் இலவசக் குடிநீரைப் பரிசோதனை செய்ததில் ‘இகோலி’ (E.coli) நுண்ணுயிரி இருப்பது சிஏஜி ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 16ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, முதல்கட்டமாக, ரயில்வே கண்காணிப்பின் கீழ் உள்ள 20,000 இடங்களில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
“நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை உடனடியாக மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சு உத்தரவிட்டுள்ளது,” என்று தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்தார்.
“குடிநீர் விநியோகத்தில் உடனடியாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் பழைய நீர் தேக்கத் தொட்டிகளை அகற்றிவிட்டு, புதிய தொட்டிகளை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
குடிநீர் ஆதாரங்கள், விநியோக மையங்கள் ஆகிய இரண்டிலும் வழக்கமான நீரின் தரம் குறித்த பரிசோதனைகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்காணிப்பு, தொட்டிகளைச் சுத்தம் செய்தல், குடிநீர் தர அறிக்கைகளை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையைப் பேணவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
முதல்கட்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திய பின்னர், படிப்படியாக பல்வேறு இடங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


