துங்கர்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறத்தாழ 70 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த ஆணும் பெண்ணும் தள்ளாத வயதில் திருமணம் செய்துள்ளனர்.
அந்த மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும் பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்துகொள்ளலாம். மணம்புரிவது கட்டாயம் இல்லை.
அதனால் ராமா பாய் கராரி, 95, என்பவர் ஜீவாலி தேவி, 90, என்னும் பெண்ணுடன் தமது 25 வயது முதல் கடந்த 70 ஆண்டுகளாக பழங்குடி கிராமத்தில் சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தினார்.
அவர்களுக்கு 8 குழந்தைகளும் பல பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத தம்பதியினர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடு அந்த பழங்குடியினர் சமுதாயத்தில் உள்ளது.
அதனால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ராமா பாய் கராரிக்கும் ஜீவாலி தேவிக்கும் இருந்து வந்தது.
அதனை அறிந்த பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அதற்கு அவ்விருவரும் சம்மதித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
திருமணத்தை தடபுடலாகக் கொண்டாட அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ஜூன் 1ஆம் தேதி அன்று திருமணத்துக்கு முந்தைய ஹால்தி, பந்தோலி நிகழ்ச்சிகள் மேளதாளம் முழங்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.
தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஒட்டுமொத்த கிராமத்தினரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்ததாக ராமா பாயின் மகன் கந்தி லால் கராரி ஊடகங்களிடம் கூறினார்.