தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை: வேட்பாளர் கைது

2 mins read
8a2b8c0b-b08b-478e-abc4-27a9a0f7ee0b
ராஜஸ்தானின் டொங்க் மாவட்டத்தில் வெடித்த வன்முறையில் வாகனங்களுக்குத் தீ மூட்டப்பட்டது. - படம்: இந்தியா டிவி / இணையம்

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் புதன்கிழமையன்று (நவம்பர் 13) நடைபெற்றது.

தேர்தலின்போது ராஜஸ்தானின் டொங்க் (Tonk) மாவட்டத்தில் உள்ள டியோலி-உனியாரா (Deoli-Uniara) தொகுதியில் பெரிய அளவில் வன்முறை வெடித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுயேச்சை வேட்பாளரான நரே‌ஷ் மீனா, மாவட்ட நீதிபதி அமித் செளத்ரியை அறைந்ததாக நம்பப்படுவதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததெனத் தெரிவிக்கப்பட்டது.

திரு நரே‌ஷ் மீனா கைதுசெய்யப்பட்டதாகவும் பின்னர் செய்தி வெளியானது.

கைதான சுயேச்சை வேட்பாளர் நரே‌ஷ் மீனா.
கைதான சுயேச்சை வேட்பாளர் நரே‌ஷ் மீனா. - படம்: பிடிஐ

புதன்கிழமையன்று சம்விராத்தா கிராமத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறையினருக்கும் நரே‌ஷ் மீனாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை வெடித்ததோடு ஆங்காங்கே தீ மூட்டப்பட்டது.

அதனையடுத்து 60 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஓம் பிரகா‌ஷ் தெரிவித்தார்.

“பல வாகனங்கள் தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,” என்று திரு பிரகா‌ஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

திரு நரே‌ஷ் மீனா சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகவும் அவருக்கான தேடல் தொடர்வதாகவும் திரு பிரகா‌ஷ் முன்னதாகக் கூறியிருந்தார். வாக்காளர் இயந்திரத்தில் இருந்த தனது தேர்தல் சின்னம் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டதாக திரு மீனா கூறியதாகவும் சில தகவல்கள் வெளியாயின.

சம்பவம் பதிவான ஒரு காணொளியில், திரு மீனா, நீதிபதி செளத்ரியின் சட்டையை இழுத்து அவரை அறைந்தது போல் தெரியும் காட்சி பதிவாகியுள்ளது. காவல்துறையினர் திரு மீனாவைத் தடுக்க முயன்றபோது அவர் அவ்வாறு செய்தது போலவும் தெரிந்தது.

அதோடு, திரு மீனா காவல்துறையினரை இழிவுபடுத்துவது போலவும் காணொளியில் கேட்டது. வன்முறையில் குறைந்தது 60 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதன்கிழமையன்று ரா‌ஜஸ்தானில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த ஏழு தொகுதிகளில் சராசரியாக 65.29 விழுக்காட்டினர் வாக்களித்ததாக தி இந்து போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன. இடைத்தேர்தல் முடிவுகள் இம்மாதம் 23ஆம் தேதியன்று வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்