ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம், கோத்டா பகுதியில் சிமெண்ட் ஆலை முன்பு தற்கொலைக்கு முயன்ற வித்யதார் யாதவ் என்னும் விவசாயியைக் காவல்துறை தடுத்துக் காப்பாற்றியது.
தமது குடும்பத்துக்குச் சொந்தமான வீடு, வயலை ஆக்கிரமித்த சிமெண்ட் ஆலையிடம் அதிக இழப்பீடு கோரி டிசம்பர் 11ஆம் தேதி குடும்பத்துடன் தற்கொலை செய்ய அவர் முயன்றார்.
விரைந்து வந்த கால்துறையினர் அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுத்தனர். தொடர்ந்து மாநிலக் காவல்துறை சார்பில் விவசாயி வித்யதார் யாதவ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அதற்காக ரூ.9.91 லட்சம் கட்டணம் செலுத்த ஜுன்ஜுனு மாவட்ட காவல்துறை சார்பில் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்தக் கடிதத்தில், “காவல்துறையின் ஒரு துணைக் கண்காணிப்பாளர், 2 உதவிக் கண்காணிப்பாளர்கள், 2 ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், 6 துணை ஆய்வாளர்கள்,18 தலைமைக் காவலர்கள், 67 காவலர்கள் ஆகியோர் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி உள்ளனர்.
“அதற்காக ரூ.9.91 லட்சத்தை அரசு கருவூலத்தில் 7 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்,” என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயி வித்யதார் யாதவ் கூறும்போது, “எங்கள் வீடு, வயலை சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றோம்.
“காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். தற்போது ரூ.9.91 லட்சம் கட்டணம் கேட்கின்றனர். என் மீது வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

