இரட்டையர்கள் சில மணி நேர இடைவெளியில் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பார்மரைச் சேர்ந்த இரட்டையர்களான சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கி.மீ. தொலைவில் வசித்து வந்தனர.
குஜராத் மாநிலம், சூரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து சுமர் விழுந்து இறந்தார். ஜெய்ப்பூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சோஹன் உயிரிழந்தார்.
சகோதரர்கள் இருவரின் உடல்கள் அவர்களது சொந்த கிராமமான சார்னோ கா தலாவில் வியாழக்கிழமை (ஜனவரி 12) தகனம் செய்யப்பட்டது.
"புதன்கிழமை இரவு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது சுமர் வழுக்கி விழுந்தார். தம்முடைய சகோதரர் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு வீடு திரும்பிய சோஹன், வியாழக்கிழமை அதிகாலை தண்ணீர் தொட்டியில் விழுந்தார்," என்று பார்மர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி சுரேந்திர சிங் கூறினார்.
இந்த இரட்டையர்களுக்கு மேலும் இரு உடன்பிறப்புகள் இருப்பதாக அவர்களது கிராமத்தில் வசிக்கும் போகர் ராம் கூறினார். குழந்தைப் பருவத்திலிருந்து சுமர், சோஹன் இருவருக்கும் இடையே வலுவான பிணைப்பு இருந்து வந்ததாக அவர் சொன்னார்.
"கல்வியில் சுமர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், கடுமையாக உழைத்து கல்வியில் சிறந்து விளங்குமாறு சோஹனுக்கு சுமர் அறிவுறுத்துவார்.
"சோஹன் நன்றாக படித்து ஆசிரியராவதற்கு உதவ, வாழ்வாதாரத்தைத் தேடி சுமர் சூரத்திற்குச் சென்றார்," என்றார் அந்த கிராமவாசி.

