வலுவான எதிர்க்கட்சி ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் காட்டுகிறது: ரஜினி

1 mins read
205e388f-d5c5-485b-8886-320794335df3
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

சென்னை: இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், “இந்தியாவின் மறைந்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கிறார். இது ஒரு மகத்தான சாதனை, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

“அதேசமயத்தில், இந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் காட்டுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிக்கு அதிபர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் மோடியின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சி நன்றாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இந்தத் தகவல் அதிபர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்