சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திருச்சி சிவா, அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்ட அறுவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஆறு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகிய நால்வரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரையும் அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
வேட்புமனுவைத் திரும்பப் பெற இறுதிநாளான திங்கட்கிழமை (மார்ச் 9) வரை வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அறுவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ் முதலில் வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக கூட்டணியைச் சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததாலும் பாமகவின் ராமதாஸ் ஆதரவு வேட்பாளர் சுவாமிநாதனின் மனு நிராகரிக்கப்பட்டது.

