புதுடெல்லி: ஹரியானா சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் 20 நாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரோடாக் சிறையிலிருந்து அவர் இந்திய நேரப்படி அக்டோபர் 2ஆம் தேதி காலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
ராம் ரஹீம் சிங்கைப் பிணையில் விடுவிக்க ஹரியானாவின் தலைமைச் செயலாளர் அலுவலகம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் அவரைப் பிணையில் விடுவித்தது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.
வாக்காளர்களி்ன் மனப்போக்கை அவர் மாற்றக்கூடும் என்றும் தேர்தல் நேரத்தில் அவரைப் பிணையில் விடுவித்தது முறையற்ற செயல் என்றும் காங்கிரஸ் சாடியது.
இரண்டு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் ராம் சந்தர் சத்திரபதி எனும் செய்தியாளரைக் கொலை செய்ததற்காகவும் ராம் ரஹீம் சிங் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கு முன்பு நடந்த தேர்தல்களுக்கு முன்பாகவும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.