அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் காணிக்கையாகத் திரண்ட தொகையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், கைதான எட்டுப் பேருக்கு எதிராக 7,000 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லக்னோ காவல்துறையின் ஆணையர் விஜய் விஷ்வாஸ் பாந்த் தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரமாக நடத்தி வந்தது.
காணிக்கைப் பணத்தை எண்ணும் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏறக்குறைய 105 முறை முறைகேடாகப் பணம் திருடப்பட்டதும் மறைக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக இதுவரை 173 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடயவியல் தணிக்கை அறிக்கைகள், வங்கிப் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் ஆகியவற்றை முக்கிய ஆதாரங்களாகக் கொண்டு இந்தக் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு நபர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ராமர் கோவில் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகளான சம்பத் ராய், அணில் மிஸ்ரா ஆகியோரின் பெயர்கள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எட்டு பேருக்கும் எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாக புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
