லக்னோ: அயோத்தி ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு தொடர்பாக மேலும் 30 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான பால ராமர் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலை ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளும் மதிப்புமிக்க பொருள்களும் திருடப்படுவதாக ஜூன் 13ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் கோரிக்கையின் பேரில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக, பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 30 பேர் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர், கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையில் உள்ளவர்களின் பரிந்துரையில் கோயில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
காணிக்கைப் பணத்தை எண்ணும் பணியில் ஏறத்தாழ 50 பேர் ஈடுபட்டிருந்ததாகக் காவல் துறை விசாரணை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணை அதிகாரிகள் தற்போது அந்த ஊழியர்களின் பின்னணியைச் சரிபார்த்து வருவதுடன், பணம் எண்ணும் பணியில் சேர்ந்த பிறகு அவர்களில் யாரேனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளனரா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.
நடைபெற்று வரும் விசாரணை, அறக்கட்டளையின் சில மூத்த அதிகாரிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுவரை அவர்கள் மீது எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே, காணிக்கை முறைகேடு விவகாரம் அயோத்தி ராமர் கோவிலின் புனிதத்துக்குக் களங்கம ஏற்படுத்தியதாக பல்வேறு இந்து அமைப்புகள் கூறியதையடுத்து, களங்கத்தைப் போக்குவதற்கான பத்து வழிபாடு அந்தக் கோயிலில் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தொடங்கிய வழிபாட்டில் பத்து நாள்களும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், காணிக்கை முறைகேடு தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கையை மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு ஜூலை 20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ராமா் கோயில் அறக்கட்டளையின் உயர்நிலைக் கூட்டம் ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

