பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு: பொதுக்குழுவில் அதிரடித் தீர்மானம்

2 mins read
765836e0-ab16-4c1e-ba3b-1fe02ef6fe55
பாமக தலைவர் ராமதாஸுடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி. - படம்: விகடன்

சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ராமதாஸைத் தேர்வு செய்து, அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 29) காலையில் நடைபெற்றது. கட்சியில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ‘கட்சி யாருக்குச் சொந்தம்?’ என்ற இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராகச் சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் கடந்த மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜி.கே. மணியைக் கட்சியிலிருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், “துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம்,” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, “அன்புமணி வேண்டுமானால் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான் பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்,” என்று ஆவேசமாகப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்