புதுடெல்லி: ராமர் கோவில் நன்கொடை பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரிக்க கோடைகால விடுமுறைகால அமர்வு இரண்டாவது முறையாக மறுத்துவிட்டது.
இந்த நிலையில், கண்காணிப்புக் கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் வரும் நாள்களில் சத்தமில்லாமல் அழிக்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது சிதைக்கப்படவோ வாய்ப்புள்ளது என்று மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் என்.கே. கோசுவாமி திங்கட்கிழமை (ஜூன் 29) எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் என்.கே.கோசுவாமி வாய்மொழியாக முறையிட்டார்.
அப்போது வாதிட்ட அவர், “மின்னணு ஆதாரங்கள் என்பது கல்வெட்டு போன்று அழிக்க முடியாதது அல்ல. கண்காணிப்புக் கேமரா ஆதாரங்கள் நீதிமன்ற விடுமுறைக்காகக் காத்திருக்காது. மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை பதிவுகள், கணினித் தரவுகள் மாற்றப்படலாம் அல்லது முற்றிலும் நீக்கப்படலாம். எனவே, ஆதாரங்களைப் பாதுகாப்பதே முதன்மை கோரிக்கையாக இருக்கும்போது வழக்கை ஒத்திவைப்பது என்பது நீதியை மறுப்பதற்குச் சமம்,” என்றார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணையைக் கோரவில்லை என்றும் தடையங்கள் அழிக்கப்படாமல் இருக்க ஒரு தற்காலிகப் பாதுகாப்பு உத்தரவை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியதாக த இந்து வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றப் பதிவாளர் தன்னிடம், இந்த மனு ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடையும் கோடைகால விடுமுறைக்குப் பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக என்.கே.கோசுவாமி நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், வழக்கறிஞர் எழுப்பிய இந்த முக்கியப் பிரச்சினை குறித்து நேரடியாக எந்தப் பதிலும் அளிக்காத அமர்வு, வழக்குகளை முறையிடுவதற்கும் பட்டியலிடுவதற்கும் உள்ள வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தியது.

