புதுவை: புதுவையை அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என முதல்வர் ரங்கசாமி தனது உரையில் உறுதி அளித்தார்.
புதுவையில் தனிநபர் வருமானம் ரூ.3,06,119ஆக உயர்ந்துள்ளது என சுதந்திர தின விழாவில் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், புதுவையில் நாள்தோறும் ரூ.112 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் ரூ.34.35 கோடியில் ஐஸ்கிரீம் உற்பத்தித் திறன் இரட்டிப்பாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்தர நிதியுதவித் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500-ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்றும் புதிய மேம்பாலப் பணிகள் ரூ.483.51 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ.4,750 கோடி கடனுதவியுடன் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட உள்கட்டமைப்புப் பணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என்றார் முதல்வர் ரங்கசாமி.
இவ்விழாவில் வழக்கத்திற்கு மாறாக, முதன்முறையாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலிலும், இரண்டாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும் இசைக்கப்பட்டன.
பின்னர், முதல்வர் கொடியேற்றியதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.


