பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில், பேருந்திற்காகக் காத்திருந்த தமிழகப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரைக் காவல்துறை கைதுசெய்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இரவு 11.30 மணியளவில், தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் பெங்களூரில் உள்ள கே.ஆர். சந்தை அருகே பேருந்திற்காகக் காத்திருந்தார். அப்போது, அங்கிருந்த இருவரிடம் ஏலஹன்கா வட்டாரத்திற்குச் செல்வதற்கான பேருந்து குறித்து விசாரித்தார்.
அந்தப் பெண்ணிற்கு உதவுவது போன்று நடித்த இருவரும் பேருந்து நிற்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறி சந்தைக்குப் பின்புறம் உள்ள காய்கறிகளைச் சேமித்துவைக்கும் கிடங்குகள் இருக்கும் சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
யாரும் இல்லாத அந்த இடத்தில், அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரிடமிருந்த கைப்பேசி, நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக, பெங்களூரு மத்திய மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கே. ஆர். சந்தையில் பணியாற்றிய கணேஷ், ஷரவன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.