புதுடெல்லி: விவசாயி ஒருவர் கொண்டு சென்ற ஒட்டுரகப் பலா மரக்கன்று, விமானம் தாமதமானதால் சேதமடைந்ததையடுத்து, அவருக்கு ரூ. 90,750 இழப்பீடு வழங்குமாறு ஏர்ஏஷியா (AirAsia) நிறுவனத்திற்கு பயனாளர் ஆணையம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
ஏர்ஏஷியா நிறுவனம் ஆணையத்திடம் முன்னிலையாகத் தவறியதால், ஒருதலைப்பட்சமாக வழக்கை விசாரித்த கேரளாவின் பாலக்காடு மாவட்ட பயனாளர் ஆணையம், திங்கட்கிழமை (மே 8) இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
பாலக்காட்டைச் சேர்ந்த விவசாயியான அப்துல் அஸீஸ், பண்ணைக்காக பலா மரக்கன்று ஒன்றை வாங்குவதற்காக கொச்சியிலிருந்து இந்தோனீசியாவுக்குப் பயணம் செய்தார்.
கன்றை வாங்கிய பின்னர் அவர், கோலாலம்பூர் வழியாகக் கொச்சிக்கு செல்வதாக இருந்தது.
இருப்பினும், மேடான்-கோலனாமுவிலிருந்து புறப்பட வேண்டிய விமானம் பல மணிநேரம் தாமதமானது.
இதனால், கொச்சிக்குச் செல்ல வேண்டிய அவரது பயணத்திற்கான விமானம் புறப்பட்ட பிறகு அவர் கோலாலம்பூரைச் சென்றடைந்தார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட அஸீஸ், உடனடியாக ஏர்ஏஷியா அதிகாரிகளை அணுகி, அதே நாளில் மாற்று விமானத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
நீண்ட நேரத் தாமதத்தைத் தாங்க முடியாத, எளிதில் வாடிவிடக்கூடிய மரக்கன்றை அவர் வைத்திருந்ததால், அதற்காகக் கூடுதல் தொகையைச் செலுத்தவும் அவர் தயாராக இருந்ததாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் கொச்சிக்கான அடுத்த சேவை மூன்று நாள்களுக்குப் பிறகுதான் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

