கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரிய வகை பல்லிகளைக் கடத்த முயன்ற மூவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 11 ‘டோக்கே கெக்கோ’ எனப்படும் அரிய வகைப் பல்லிகள் மீட்கப்பட்டன.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் மிகவும் ஆபத்தானவை என்று வகைப்படுத்தப்பட்ட பல்லிகள் அவை என்றும் அவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டு உள்ளன.
தடையை மீறி ‘டோக்கே கெக்கோ’ பல்லிகளை ஏற்றுமதி செய்வோருக்கு அதிகபட்சமாக ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
இந்த வகை உயிரினங்கள் இந்தியாவின் அசாம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களில் அதுவும் ஒருசில இடங்களில் மட்டுமே வசிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியக் கள்ளச்சந்தையில் அந்தப் பல்லிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.
எனவே அவற்றைக் கடத்தி ஏற்றுமதி செய்யும் முயற்சிகள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை பிடிபட்ட மூவரும் 28 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் அரிய வகைப் பல்லிகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து சிறப்புப் படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து மீட்கப்பட்ட பல்லி ஒவ்வொன்றையும் சந்தை மதிப்பான 60 லட்சம் ரூபாய்க்கு விற்க அவர்கள் முயன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.