தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

1 mins read
636b549c-330a-4212-9328-14f9d2b4492e
சித்தாறு பகுதியில் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்த வெண்ணிற அணில். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியராகப் பணிபுரியும் திரு சுமேஷ் என்பவர் அதனைப் படம்பிடித்தார்.

பல ஆண்டுகளாகவே திரு சுமேஷ் அவ்வட்டாரத்தின் பல்லுயிர்ச்சூழலைக் கண்காணித்து வருகிறார். அத்துடன், இயற்கை மரபுடைமையைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் அமைப்பான திருவனந்தபுரம் ஷோலா இயற்கைச் சமூகத்திலும் அவர் உறுப்பினராக இருக்கிறார்.

‘லூசிசம்’ (leucism) எனும் அரியவகை மரபணு நிலைமையால், நிறம் வெளுத்துப்போய்க் காட்சியளிப்பதாகக் காட்டுயிர் ஆய்வாளரான டாக்டர் சந்தீப் தாஸ் கூறினார்.

“இவ்வகை நிலைமை ஏற்படுவது அரிதினும் அரிது. பல்லாயிரம் அணில்களில் ஒன்று லூசிசத்தால் பாதிக்கப்படலாம். அதன் காரணமாக, அவ்வணிலின் தோல் நிறம் மங்கலாம் அல்லது முற்றிலுமே வெள்ளையாகிவிடலாம்,” என்று டாக்டர் தாஸ் விளக்கினார்.

பல்லாண்டுகளாகவே அவ்வட்டாரத்தைக் கவனித்து வந்ததன் விளைவாக இந்த அரிய காட்சி தம் கண்ணில் பட்டதாகக் குறிப்பிட்டார் திரு சுமேஷ். அவரது நிழற்படம் காட்டுயிர் ஆர்வலர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

வெண்ணிற அணில் தென்பட்டது தமிழக - கேரள எல்லைப் பகுதியின் அடர்வனச் சூழலியல் செழுமையைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்