மும்பை: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் நன்கொடையாளருமான ரத்தன் டாடா (வயது 86) வயது முதிர்வு காரணமாகக் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.
மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும்விதமாக மகாராஷ்டிர மாநிலத் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநிலத் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.
மும்பையில் உள்ள மகாராஷ்டிரா ‘ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி’ கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயக் கல்விகள் கற்பிக்கப்படுகின்றன.
ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் அபூர்வாபாக்கர் கூறும்போது, “இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ரத்தன் டாடா அளப்பரிய பங்காற்றியுள்ளார். அவர் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதுடன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க ஊக்குவித்தார்.
“இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வை ரத்தன் டாடாவின் எண்ணங்களுடன் பெரிதும் ஒத்துப்போகிறது. எனவே, டாடாவின் பெயரைச் சூட்டுவதன்மூலம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மதிப்பு அதிகரிக்கும்,” என்றார்.