மும்பை: அண்மையில் காலமான இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, தாம் மிகவும் நேசித்த வளர்ப்பு நாய்க்கும் தம்முடைய சொத்தில் ஒரு பங்கை எழுதிவைத்துள்ளார்.
மறைந்த திரு ரத்தன் டாடாவிற்கு ரூ,10,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அவர் எழுதிவைத்த உயிலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தம் சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன், டீன்னா, தமக்கு நெருக்கமான உதவியாளர் சாந்தனு நாயுடு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, சமையல் உதவியாளர் சுப்பையா, ரத்தன் டாடா அறக்கட்டளை உள்ளிட்டோருக்குத் தமது சொத்துகள் சென்று சேரும்படி திரு ரத்தன் டாடா உயில் எழுதி வைத்துள்ளார்.
திரு ராஜன் ஷாவும் திரு சுப்பையாவும் நீண்டகாலமாக திரு ரத்தன் டாடாவுடன் இருந்துவந்தனர்.
அத்துடன், அவரது வளர்ப்பு நாயான டிட்டோவிற்கும் அவரது சொத்தில் ஒரு பங்கு கிடைக்கவுள்ளது. டிட்டோவைத் திரு ராஜன் ஷா கவனித்துக்கொள்ள வேண்டும் என்று திரு ரத்தன் தமது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த டிட்டோவை கடந்த ஆறாண்டுகளாக வளர்த்து வந்தார் திரு ரத்தன்.
அவருக்கு, மகாராஷ்டிர மாநிலம், அலிபாக் நகரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள 2,000 சதுர அடி பரப்பளவுடன் கூடிய பங்களா, மும்பை ஜூகு தாரா சாலையில் உள்ள இரண்டு தள வீடு, ரூ.350 கோடிக்கும் அதிகமான ரொக்கம், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் பட்டியலிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி, தமது 86ஆவது வயதில் மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.

