மும்பை: காலஞ்சென்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொது மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமது 86வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார் ரத்தன் டாடா.
அவரது நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடு பொறியியல் படிப்பை முடித்தவர். டாடாவின் பண்பான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட சாந்தனு படிப்பை முடித்த கையோடு டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார்.
தற்போது தனது 32 வயதில் பொது மேலாளராகவும் உயர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சாந்தனு, “அவர் (ரத்தன் டாடா) தொழிற்சாலையில் இருந்து பணி முடிந்து வீட்டுக்கு நடந்தே திரும்பி வந்தது எனக்கு நினைவு இருக்கிறது. நான் அவருக்காக சன்னல் அருகே காத்திருப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாடாவுக்கு செல்லப்பிராணிகள் மீது மிகுந்த பாசம் உண்டு.
நாய்களுக்கான கழுத்துப்பட்டை (காலர்) ஒன்றைக் கண்களைக் கவரும் வகையில் வடிவமைத்தன் மூலம் ரத்தன் டாடா மனத்தில் இடம் பிடித்தார் சாந்தனு.