புதுடெல்லி: வங்கிகளில் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 0.25 விழுக்காடு குறைத்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இதுவே முதல்முறை.
பணவீக்கம் அதிகரிப்பு, பொருளியல் மந்தநிலை, மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இந்தியாவில் நிலவி வரும் இந்தக் காலக்கட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாக்கலான வரவுசெலவுத் திட்டத்தில் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வட்டிவிகிதத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ என்று அழைக்கப்படுகிறது.