புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அதிகாரபூர்வ மின்னிலக்க நாணயங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக இந்திய அரசுக்கு அந்நாட்டின் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பது குறையும் என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு தற்போது இந்தியா வசமுள்ளது. இந்த அமைப்பின் உச்சநிலை மாநாடு இந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் நடைபெறும். அந்த மாநாட்டில் தனது பரிந்துரை குறித்து விவாதிக்குமாறு இந்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
அனைத்துலக வர்த்தகம், ரூபாய் மதிப்பை பாதுகாத்தல் ஆகியவையின் அடிப்படையில் ‘இ-ருப்பி’ மின்னிலக்க நாணயத்தை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி.
இதுவரை 70 லட்சம் பேர் ‘இ-ருப்பி’ வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். இந்தியாவில் வழக்கம்போல் பயன்படுத்தப்படும் ரூபாயும் மின்னிலக்க நாணயமும் ஒரே மதிப்புக் கொண்டவை.
மின்னிலக்க நாணயம் ரிசர்வ் வங்கியால் நேரடியாக நிர்வகிக்கப்படும். எனவே, அனைத்துலகச் சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் மின்னிலக்க நாணயம் பாதிக்கப்படாது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் மின்னிலக்க நாணயத்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மின்னிலக்க நாணயங்களை ஒருங்கிணைப்பது வளர்ச்சிக்கு வித்திடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

