கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அங்கு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 77 வாக்குச்சாவடிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அரசியல் கட்சிகள் புகார் எழுப்பின. எனவே, அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அவை வலியுறுத்தின.
வாக்குப்பதிவின்போது சில தொகுதிகளில் வாக்காளர்களின் சட்டைப்பையில் ரகசிய கேமராவைப் பொருத்தி, அவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதைக் கண்காணிக்க முயற்சி நடந்ததாகக் கூறப்பட்டது.
அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த இந்தியத் தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டது. அதையடுத்து, சிறப்புப் பார்வையாளர் சுப்ரதா குப்தா ஆய்வு நடத்தியதன் பேரில், 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, ‘மகரஹட் பஸ்சிம்’ தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும் ‘டைமண்ட் ஹார்பர்’ தொகுதியில் நான்கு வாக்குச்சாவடிகளிலும் மே 2ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே, கோல்கத்தாவில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எந்த வகையான கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனக் காவல்துறை அறிவித்துள்ளது.
அந்த மையங்கள் அமைந்துள்ள ‘சாஹித் குதிராம் போஸ்’ சாலை, ‘ஜாதவ்பூர்’, ‘டைமண்ட் ஹார்பர்’ சாலை, ‘லார்ட் சின்ஹா ஹால்’, ‘பெல்டலா’ சாலை உள்ளிட்ட 7 இடங்களில் அந்தத் தடை அமலில் இருக்கும் எனக் காவல்துறை தெரிவித்தது.
இதனிடையே, கோல்கத்தாவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்கள் அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் நடமாடுவதாகத் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் ‘பபானிபூர்’ தொகுதியில் வெள்ளிக்கிழமை (மே 1) திடீர் பதற்றம் நிலவியது.
அங்குள்ள ‘ஷகாவத்’ பள்ளி, வாக்கு எண்ணும் மையங்களில் ஒன்றாகும். அங்குச் சில முறைகேடுகள் நடைபெறுவதாகச் சந்தேகம் எழுந்ததை அடுத்து, மம்தா பானர்ஜி அங்கு விரைந்தார். அவர் நீண்ட நேரம் அங்கிருந்த அவரது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், அங்கு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், காவல்துறையின் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

