புதுடெல்லி: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள ஜம்மு-காஷ்மீர், சிந்து நதி நீர், வர்த்தகம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சு நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
ஜம்மு - காஷ்மீர் வட்டாரத்தின் பஹல்காம் நகரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப்பின், இந்திய அரசாங்கம் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்நிலையில் திரு ஷெபாஸ் ஷெரீப் ஈரானுக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி சையத் அசீம் முனிரும் அவருடன் சென்றார்.
முதலில், ஈரானியத் தலைவர் ஆயதுல்லா அல் காமேனியைச் சந்தித்து ஷெரீப் பேச்சு நடத்தினார். பின்னர், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடனும் கலந்துரையாடினார். இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அவர்களிடம் பேசிய பாகிஸ்தானியப் பிரதமர், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பினோம். இப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்கள் அமைதி வாய்ப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நேர்மையாகவும் தீவிரமாகவும் எடுத்துக் காட்டுவோம்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, திரு அல்கமேனி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் பேச்சு வாயிலாகத் தீர்க்கப்படும் என நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானை தொடர்ந்து தஜிகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு ஷெரீப் செல்லவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ஈரான் அதிபரிடம் பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியதாகவும் அதற்கு ஈரான் அதிபர் நேரடியாகப் பதிலளிக்காமல், பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி குறிப்பிட்டதால் திரு ஷெபாஸ் ஷெரீப் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.