புதுடெல்லி: கட்டுமான நிறுவனங்களும் வங்கிகளும் அறிவித்த திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்காத நிலையில், மாதத் தவணை செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு வாங்குபவர்களை இருதரப்பினரும் கண்ணீர் சிந்த வைப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தன.
மேலும், விசாரணை முகமை இந்த விசாரணையை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து ஒரு முன்மொழிவை அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, பல கட்டுமான, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமான நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் இடையேயான மறைமுகக் கூட்டு என்பது வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் முயற்சி மேற்கொண்ட லட்சக்கணக்கானோரை துன்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அவர்களை மீட்க முன்வந்துள்ளது என்று நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
பல்வேறு திட்டங்களின்கீழ் வீடு வாங்குபவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகி, நாள்தோறும் பலர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்கள் என்றும் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்த்து வைப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்றும் மேற்குறிப்பிட்ட அமர்வு ஒரு வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்டது.
“ஆயிரக்கணக்கான மக்கள் அழுகிறார்கள். அது தெளிவாகிறது. அவர்களின் கண்ணீரை நம்மால் துடைக்க முடியாது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளை நாம் நிவர்த்தி செய்ய முடியும். எனவே, நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்துவோம்,” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இரண்டு வாரங்களில் சிபிஐ தனது திட்டத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தியாவில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அதேசமயம், குறித்த தேதியில் பணிகளை முடிக்காத போதும், கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு வங்கிகள் மாதாந்திரத் தவணையைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளன.