புதுடெல்லி: இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் அதிக செலவில் தங்கம் வாங்கிக் குவிப்பதே அதன் விலை உயர்வுக்குக் காரணம் என்றார்.
மேலும், இந்தியாவில் அட்சய திருதியை, பண்டிகைக்காலம் ஆகியவையும் தங்கத்தின் விலை உயர முக்கியக் காரணிகளாக அமைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இதனால் தங்கத்தில் மேற்கொண்டு முதலீடு செய்வதா அல்லது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பதா என முடிவெடுக்க இயலாமல் பொதுமக்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்நாட்டு நுகர்வுக்கான தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் திங்கள்கிழமை (பிப்ரவரி 23) செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், நிச்சயமற்ற தன்மை, நாணய ஏற்ற இறக்கம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு சமாளிக்க முதலீட்டாளர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.
எனவே, இந்தியாவுக்கான உலோக இறக்குமதியை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தான விகிதத்தை எட்டவில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த முதலீடு குறிப்பிட்ட வரம்பை இன்னும் கடந்துவிடவில்லை என்று தாம் நினைப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியும் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை, நடுத்தர மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்க இறக்குமதி அதிகரித்தால் உள்நாட்டில் அதன் விலை குறையும் என்று கூறப்பட்ட கணக்குகளும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகிவிட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. எனினும் தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை.
மக்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

