புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதைத் தடுத்தால் மூன்று ஆண்டுகள்வரை சிறை, அபராதம் வழங்க வகை செய்யும் புதிய சட்ட முன்வரைவை (மசோதா) திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்லது பாடுவதைக் கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தச் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேசிய கீதம், தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் போன்ற தேசியச் சின்னங்கள் வரிசையில் இனி தேசியப் பாடலை அவமதிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக மாறும்.
மக்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிற சட்ட முன்வரைவுகளில், பிறப்பு, இறப்பு பதிவைத் தாமதமாகச் செய்வதைத் தடுக்க வழி செய்யும் என்று கூறப்படுகிறது.

