தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஹிமாச்சல் முதல் மும்பை வரை - மழையால் பரிதவிக்கும் இந்திய மாநிலங்கள்

மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை: கனமழை, நிலச்சரிவில் சிக்கி இருவர் பலி

3 mins read
46a521fc-b808-4e77-881a-c0e2a3640496
கடந்த மே மாதம் முதல் மும்பை மாநகரில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்
கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒட்டுமொத்த மும்பை மாநகரமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒட்டுமொத்த மும்பை மாநகரமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. - படம்: இணையம்

மும்பை: கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒட்டுமொத்த மும்பை மாநகரமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அதி தீவிர கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இருவர் மாண்டுவிட்டனர்.

வடமாநிலங்களில் தற்போது கனமழையும் வெள்ளப்பெருக்கும் புரட்டிப்போட்டு வருகின்றன. உத்தராகண்ட், காஷ்மீரைத் தொடர்ந்து மும்பையையும் கனமழை ஆட்டிப்படைத்து வருகிறது.

மும்பையில் மீட்பு, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அவசரம் இல்லாத காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறவோ, பயணங்களை மேற்கொள்ளவோ வேண்டாம் எனக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் மும்பை காவல்துறை எச்சரித்துள்ளது.

நாட்டின் ‘வர்த்தகத் தலைநகரம்’ எனக் குறிப்பிடப்படும் மும்பை மாநகரம், ஒட்டுமொத்தமாக பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் அங்கு மழை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே நகரங்களுக்கு முறையே சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,

ஆகஸ்ட் 19ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி, குடிசை ஒன்று முற்றிலுமாகச் சேதமடைந்ததில் இருவர் மாண்டனர். மேலும், காயமடைந்த சிலர் விக்ரோலி மேற்குப் பகுதியில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருப்பதால், உள்ளூர் மக்கள் கடும் அவதிகளை எதிர்கொண்டுள்ளனர். அரசு நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் சாடுவதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் மழைநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதால் நிலைமை மோசமடைந்துவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8.30 மணியளவில் மும்பையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. விக்ரோலியில் அதிகபட்சமாக 257.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து சாண்டாக்ரூஸில் 244.7 மிமீ மழையும் சியோனில் 228.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளன. ஜூஹுவில் 219.5 மிமீ மழையும் பாந்த்ரா மற்றும் பைகுல்லாவில் முறையே 184.0 மிமீ மற்றும் 172.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

மும்பையின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக, ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாதர், பாந்த்ரா போன்ற முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் தாமதமானதாக ரயில்வே நிர்வாகம் கூறியது.

இதற்கிடையே  மேகவெடிப்பால் பொழிந்த பெருமழையின் காரணமாகச் சிம்லா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன. சிம்லாவின் சம்மர் ஹில், பாக்லி மற்றும் கிருஷ்ணா நகர் நிலச்சரிவுகளால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

விமானப்படை, ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  மழை கொட்டித்தீர்த்துள்ளது. பொதுவாக ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ந்தேதி இமாச்சலில் சராசரியாக 730 மி.மீ. மழை பெய்யும். 

ஆனால் இந்த ஆண்டு கடந்த 54 நாட்களில் 2742 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்துவருவதால் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கும் வழி இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஆப்பிள் அறுவடை

வீடுகள், சாலைகள், எல்லாம் மழையினால் சேதங்களைச் சந்தித்தது ஒருபுறம் என்றால் இமாச்சலில் உள்ள ஆப்பிள் விவசாயிகளின் அறுவடை கனவும் மழையில் மூழ்கியுள்ளது.

இமாச்சல் மாநிலததில் ஆப்பிள் உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய மழையால் ஆப்பிள் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக விவசாய நிலங்கள் மழைநீரால் சூழப்பட்டு, அறுவடை செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும் மழையால் சாலை போக்குவரத்தும் முடங்கியிருக்கும் நிலையில் பறித்து வியாபாரத்திற்காக ஆயத்தமாக இருக்கும் ஆப்பிள் பழங்களைப் பிற இடங்களுக்கு அனுப்பவும் முடியாததால் அதனைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.1000 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும்  தீவிரமடைந்து வருவதால் ஆகஸ்ட் 20ம் தேதிவரையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இடர்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், இதனைக் கவனமுடன் சமாளிக்க தகுந்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்