புதுடெல்லி: தேசியத் தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் இந்திய அரசு ஓர் உயர்மட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலகேணி தலைமை ஏற்பார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அண்மையில் ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்தது, ‘சிபிஎஸ்சி’ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆகியன நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.
இதையடுத்து, கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இளையர்கள் டெல்லியில் ஒன்றுதிரண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியில் திரு தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில், தேர்வு முறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில் தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த முக்கிய நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நந்தன் நிலேகணி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோமநாத், இந்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர் டபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, முன்னாள் மத்தியக் கல்வித்துறை செயலாளர் அனிதா அகர்வால், தளவாடங்கள்-நிர்வாகத் துறை நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து காணொளிப்பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுகளில் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் எதிர்காலத்தில் எந்தவித முறைகேடும் நடக்காத வண்ணம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வு முறையை மிகவும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்ற இந்தப் பதிய குழுவின் பரிந்துரைகள் வழிவகுக்கும் என்றும் திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது எக்ஸ் பதிவில் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே 2024ல் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு 101 பரிந்துரைகள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பரிந்துறைகளை முழுமையாகச் செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் சேதமடைந்த பிம்பத்தைச் சீரமைக்கவே புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயராம் ரமேஷ் மேலும் கூறியுள்ளார்.

