கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் 11 வயதுச் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் 11 வயதுச் சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பலமணி நேரம் கழித்தும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
அப்போது சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொன்று, ஒரு சாக்குப்பையில் திணித்து குளத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இந்தியா முழுவதும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் நாள்தோறும் இதுபோன்று 80க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்துறையில் பதிவாகி வருவதாகவும் இந்தியக் குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவில் 29,536 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 69,191ஆக அதிகரித்துள்ளது.
வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் 12 வயதுச் சிறுமி ஒருவர் நான்கு நாள்கள் பல்வேறு தங்கு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பின்னர், சிறுமி மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்திலிருந்து ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காசியாபாத் பகுதியில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஜூன் 13, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
பாலியல் குற்றங்களுக்காக 2026ஆம் ஆண்டுக்குள் 2,600 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கப்போவதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், அண்மைய அரசாங்கத் தரவுகளின்படி, நாடு முழுவதும் 410 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் உட்பட, 755 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்க, ராஜஸ்தான் சிறுமிக்கும், இதர பெண் குழ்ந்தைகளுக்கும் ஏற்பட்ட கதி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற வழக்குகளில் சந்தேக நபர்களைக் காவல்துறை சுடுவது என்பது, சமூகத்தின் பதற்றத்தைத் தணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வேடிக்கை நிகழ்வு என்று வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பிருந்தா குரோவர் கூறுகிறார். உடனடியாக நீதி வழங்குவது போல் தோற்றமளிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றத்தின் தீவிரத்தை மறைத்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளில் சீர்திருத்தங்கள் மேள்கொள்ளப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

