புதுடெல்லி: உலகளாவியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அனைத்துலக அரங்கில் ஐநா தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் நடைபெற்ற ‘கௌடில்யா பொருளியல் உச்ச நிலை மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய சூழலில் உலக அளவில் ஏற்படும் மோதல்கள், நெருக்கடிகள் தொடர்பில் ஐநாவின் பங்களிப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
உக்ரேன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்கள், ஆப்பிரிக்கப் பிரச்சினைகள், ‘கொவிட்-19’ பெருந்தொற்று போன்ற உலகளாவிய அவசரச் சூழல்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஐநா இழந்துவிட்டதாக திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஐநா தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும், பழைய நிர்வாகக் குழுவையே தொடர்வது சாத்தியமற்றது என்றார்.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் மாற்றங்களைக் கொண்டுவர சில நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் பெயரைக் கூறி முட்டுக்கட்டை போடுவதாகவும், ஆனால், ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் தெளிவான நிலையை ஏற்கெனவே முன்வைத்துள்ளதாகவும் திரு ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
“எங்களுக்கு ஐநா சபை தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப அந்த அமைப்பைச் சீரமைப்பதே முதன்மையான பணி. அமைப்பைத் தவிர்ப்பதைவிட அதைச் சரிசெய்வதே சிறந்தது,” என்றும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உயர்த்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், அமைச்சரின் இக்கருத்து உலக அரசியல் அரங்கில் புது விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
