புதுடெல்லி: உலகளாவிய உத்திபூர்வ அணுகுமுறை என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளிகளையும் சமமாக சித்திரிக்க ஒரு தரப்பினர் முயற்சி செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஐநா பேரவையின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பைப் பாதுகாக்க, பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சாடினார்.
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்யாததால், இந்த உலக அமைப்பின் பணிகள் முடங்கிக்போன நிலையில் உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
“நடப்பவை அனைத்தும் சரியாக இல்லை. ஐநாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அர்த்தமுள்ள சீர்த்திருத்தங்கள், அதற்கான செயல்முறையைப் பயன்படுத்தியே தடுக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
“ஐநாவில் சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, அந்த அமைப்பை நிலைநிறுத்துவது உலகின் முன் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது,” என்றார் ஜெய்சங்கர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர்வினையை விட ஐநா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விவரிக்கும் சில சிறந்த உதாரணங்கள் அதிகம் கூறுகின்றன என்றார் அவர்.
பஹல்காம் போன்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கும் அமைப்பையே பதவியில் இருக்கும் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் வெளிப்படையாகப் பாதுகாக்கும்போது, அதன் பன்முகத்தன்மையின் நம்பகத்தன்மைக்கு இதனால் என்ன என்னவாகும்?” என்று ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார்.
அவரது இக்கருத்து பாகிஸ்தானை நேரடியாக விமர்சிப்பதாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் தமது உரையில் எந்த இடத்திலும் பாகிஸ்தான் பெயரை உச்சரிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“உலகளாவிய உத்திபூர்வ அணுகுமுறை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகளும் சமமாக மதிப்பிடப்பட்டால், உலகம் இழிவானதாக மாறிவிடும். பயங்கரவாதிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் தடைகளை எதிர்கொள்வதில் இருந்து பாதுகாக்கப்படும்போது, அத்தகைய செயல்பாடு நேர்மையாக உள்ள தரப்புக்கு என்ன மாதிரியான தகவலைச் சொல்கிறது?” என்றும் திரு ஜெய்சங்கர் கேட்டார்.
ஐநா முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், எவ்வளவு கடினமாக இருந்தாலும், பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பு வலுவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

