கொல்லம்: சுடிதார் அணிந்து வந்ததால் தலைமை ஆசிரியையைப் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கொட்டாரக்கரா அருகே நெடுவத்தூரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (பிப்ரவரி 4) நிகழ்ந்தது.
அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியின் மேலாளர் கே. சுரேஷ்குமாரின் உத்தரவின்பேரில், தலைமை ஆசிரியை சிந்து எஸ் நாயருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆசிரியைகள் சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்துவர அரசு உத்தரவு அனுமதிக்கிறது. ஆனால், தலைமை ஆசிரியை சுதா சேலை அணிந்துவர வேண்டும் என்று சுரேஷ்குமார் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சம்பள நாளன்று காலை 8.45 மணியளவில் மாணவர்களின் நண்பகல் உணவிற்குத் தேவையான முட்டை உள்ளிட்ட பொருள்களுடன் தலைமை ஆசிரியை சிந்து ஆட்டோவில் வந்திறங்கினார். ஆனால், மேலாளரின் உத்தரவிற்கு இணங்கி, வாயிற்காப்பாளர் அவரை உள்ளேவிட மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, கையிலிருந்த பொருள்களுடன் நுழைவாயிலுக்கு முன்பாகவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் திருவாட்டி சிந்து. மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் வந்த பின்னரும்கூட அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தகவலறிந்து பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் டி. அஜித் குமாரும் மற்ற உறுப்பினர்களும் காலை 9.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் காவல்துறையினரும் வந்துசேர, திருவாட்டி சிந்துவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் காவல்துறைப் பாதுகாப்புடன் அவர் பள்ளி அலுவலகத்திற்குச் சென்றார்.
ஆயினும், தலைமை ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது, பாகுபாடானது எனக் கூறி, ஆசிரியர் சங்கங்களும் அரசியல் சார்ந்த அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி மேலாளர்மீதும் பாதுகாவலர்மீதும் திருவாட்டி சிந்து காவல்துறையில் புகாரளித்தார். அவர்கள்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்வித்துறை அதிகாரிகளை அணுகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

