தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடிவிற்கு வந்தது பதிவஞ்சல் சேவை

1 mins read
ba8367bc-abc7-40f8-ab3a-4eaf5a856bef
பதிவஞ்சல் சேவையை விரைவஞ்சல் சேவையுடன் இந்திய அஞ்சல்துறை இணைத்துவிட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பதிவஞ்சல் (Registered post) சேவை புதன்கிழமையுடன் (அக்டோபர் 1) முடிவிற்கு வந்தது.

இனி விரைவஞ்சல் (Speed post) சேவை மட்டுமே வழங்கப்படும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இணங்க, விரைவான, பாதுகாப்பான அஞ்சல் விநியோகச் சேவைக்கான தேவை காரணமாகப் பதிவஞ்சல் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருகாலத்தில், சட்ட அறிவிப்புகள், பணி நியமனக் கடிதங்கள், அரசாங்கத் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் போன்றவற்றுக்குப் பெரிதும் விருப்பமான தெரிவாக பதிவஞ்சல் சேவை திகழ்ந்தது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியே பதிவஞ்சல் சேவையை நிறுத்திவிட்டு, அதனை விரைவஞ்சல் சேவையுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், விரைவஞ்சல் சேவைக்கான மென்பொருள் புதுப்பிப்பு காரணமாக அது தள்ளிப்போடப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட விரைவஞ்சல் சேவை மூலம், நிகழ்நேரத்தில் தங்களது அஞ்சல் எங்குள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் அறிய முடியும். கடிதங்களும் அஞ்சல் பொதிகளும் உரியவரிடம் ஒப்படைக்கப்படுவது ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல் (otp) மூலம் உறுதிசெய்யப்படும்.

புதிய மாற்றங்களை உறுதிப்படுத்திய அஞ்சல்துறை மூத்த கண்காணிப்பாளர் பி.கே.பாண்டே, சேவைகளை ஒழுங்குபடுத்தவும் வாடிக்கையாளர் சேவைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இலக்கு கொண்டுள்ளதாகக் கூறினார்.

இதனையடுத்து, இந்தியாவின் முதன்மையான, பாதுகாப்பான அஞ்சல் தெரிவாக விரைவஞ்சல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவஞ்சல் சேவையை விரைவஞ்சல் சேவையுடன் இணைத்தது இந்திய அஞ்சல்துறையின் மின்னிலக்கமயப் போக்கையும் அனைத்துலகத் தூதஞ்சல் (கூரியர்), அஞ்சல் சேவைத் தரங்களுடன் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்