கைதிகளுக்கு மறுவாழ்வு: ஜார்க்கண்ட் அரசு புதிய திட்டம்

கைதிகளுக்கு மறுவாழ்வு: ஜார்க்கண்ட் அரசு புதிய திட்டம்

1 mins read
c106d951-bb81-4ed6-bf9d-d2b00a41dcbf
நன்னடத்தை, சீரான ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் தங்கி வாழ அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: என்டிடிவி
Google News Preferred Icon

ராஞ்சி: கைதிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை மீண்டும் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழவைக்கும் வகையில், திறந்தவெளி, பகுதி திறந்தவெளிச் சிறைச்சாலைகளை அமைக்க ஜார்க்கண்ட் மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி அத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள அம்மாநில சிறைத்துறை நிர்வாகம், அதற்கான முன்மொழிவையும் தயாரித்துள்ளது.

முதற்கட்டமாக ராஞ்சி, ஜாம்ஷெத்பூர், ஹசாரிபாக், தும்மா ஆகிய நான்கு மத்தியச் சிறைகளில் அதற்கான சிறப்புத் தனிப்பிரிவுகளும் தங்குமிடங்களும் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நன்னடத்தை, சீரான ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் தங்கி வாழ அனுமதி அளிக்கப்படும்.

இத்தகைய கைதிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறை வளாகத்திற்கு வெளியே சென்று சட்டபூர்வமாக வேலை செய்து சம்பாதிக்கலாம்.

கைதிகள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு தங்களது உணவு, தங்குமிடம், குழந்தைகளின் கல்விச் செலவுகளைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த சிறப்புச் சலுகை சிறைத் தண்டனையைக் குறைப்பதற்காக அல்ல, மாறாக விடுதலைக்கு முன்பாக கைதிகள் சுயசார்பு பெற்று, சமூகத்துடன் இயல்பாக இணைய அவர்களைத் தயார்படுத்துவதற்கே என்று சிறைத்துறை தலைமை ஆய்வாளர் சுதர்சன் மண்டல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்