இந்தியாவுடனான உறவுகள் வலுவானவை, ஒத்துழைப்புக்கான முடிவற்ற வாய்ப்புகள் : இஸ்ரேல் நம்பிக்கை

2 mins read
b2421e7e-f8fd-46f4-8cbd-cff5e77bc704
இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகுவுடன் (வலது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவுகள் மிக வலுவானவை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கிடையே பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நீடித்து வரும் நிலையில் மேலதிகமாக எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளியல் வழித்தடம் (IMEC) என்று அந்த அதிகாரி கூறியதாக நியூஸ் ஆன் ஏர் இணையத்தளம் தெரிவிக்கிறது.

மூன்று வட்டாரங்களுக்கு இடையே இணைப்பு, வர்த்தகம், நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றுத்திட்டம்தான் ‘ஐஇஎம்சி’. கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் ‘ஜி20’ உச்சநிலை மாநாடு நடைபெற்றது. அப்போதுதான் ‘ஐஇஎம்சி’ திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட பல நாடுகள் கையெழுத்திட்டன.

‘ஐஇஎம்சி’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்த ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலை மேற்கொண்டது ஹமாஸ். இது, இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளைப் பாதித்ததாக இஸ்ரேல் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நண்பர் என்று கருதப்படுகிறார். ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தை இந்தியா கவனமாகக் கையாண்டு வருகிறது.

காஸா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு தரப்பினரும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா பற்றி இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் பிரதமரின் இந்தியப் பயணம் அண்மையில் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் பல்வேறு ஊகத் தகவல்கள் வலம் வந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருதரப்புக்கும் இடையே மிக வலுவான உறவு நீடித்து வருவதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்தது. இரு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையேயான உறவைப்போலவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுவாக இருப்பதாக அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்