புதுடெல்லி: மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலும் அவர்களின் மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிசெய்தார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாலத்தீவு அதிகாரிகளின் திறன் மேம்பாட்டை எளிதாக்கவும் பொதுக் கொள்கை, நிர்வாகம், தொடக்கக் கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் அறிவாற்றல், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது என்றார்.
மாலத்தீவு அதிகாரிகளின் தேவைகளுக்கு ஏற்ப முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மட்டும் தேவை அடிப்படையிலான திட்டங்களை இந்தியா நிர்வகிக்க விரும்புவதாக திரு ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, மாலத்தீவு அமைச்சர் அகமது சலீம் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவுடன் அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்ததாக திரு ஜிதேந்திர சிங் பொறுப்பு வகிக்கும் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

