மும்பை: ஈராண்டுகளாகக் காதலித்தபோது இனித்த உறவு மணமான 24 மணி நேரத்தில் கசந்துவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், மருத்துவராக இருக்கும் மணப்பெண்ணும் கப்பலில் பணியாற்றும் பொறியாளரான மணமகனும் 24 மணிநேரத்திலேயே கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர்.
அவ்விருவருக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஓராண்டுக்குள் நட்பு காதலாக மாறியது. அதன் பின்னர் ஈராண்டுகளாக அவர்கள் இருவரும் காதலர்களாக ஊரைச் சுற்றினர்.
பின்னர் மணம் முடிக்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படியே திருமணம் நடந்தது. ஆயினும், திருமண வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே அது முடிவுக்கு வந்துவிட்டது.
அவர்கள் இருவரும் மணவிலக்குக் கோரிய நிலையில் நீதிமன்றமும் உடனடியாக அதனை வழங்கி உள்ளது.
இந்த வழக்கு பற்றி ராணி என்னும் வழக்கறிஞர் கூறுகையில், “மணவிலக்கு கோரிய தம்பதி மூன்றாண்டுகளாகப் பழகி, ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
“ஆனால் திருமணமானவுடனே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரின் வாழ்க்கைச் சூழல் தொடர்பாகத்தான் கருத்துவேறுபாடு இருந்தது. இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துக்கு அவர்களால் வர முடியவில்லை.
“மணவிலக்கு வழக்கின்போது கணவர் கப்பலில் வேலை செய்வதாகவும் எப்போது, எங்கு பணியமர்த்தப்படுவர் என்பது தெரியாமலும் உள்ளது; மேலும் எவ்வளவு நாள்கள் தன்னைவிட்டு அவர் பிரிந்து இருப்பார் என்பதும் தெரியாது என மனைவி தரப்பில் கூறப்பட்டது. இருவரும் ஒருமனதாக மணவிலக்குக் கோரியதால் நீதிமன்றம் அதனை வழங்கி உள்ளது,
தொடர்புடைய செய்திகள்
“இந்த வழக்கில் வன்முறை அல்லது குற்றம் என்பது போல் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. இருவருமே அமைதியான முறையில் சட்டப்படி பிரிந்துள்ளனர்,” என்றார்.
இருவரின் நலன் கருதி அவர்களைப் பற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட அனுமதி இல்லை. ஆயினும், இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வருகிறது.

