தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுமுகமாகும் உறவு: கனடாவுக்கான புதிய தூதரை நியமித்த இந்தியா

2 mins read
6e98bab4-103d-4206-b668-4df39af7efd4
கனடா நாட்டுக்கான இந்தியத் தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: கனடா நாட்டுக்கான இந்தியத் தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அங்கு உடனடியாக யாரும் கைதாகவில்லை.

இந்நிலையில், இந்தப் படுகொலைச் சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அன்றைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதை அடுத்து, இருதரப்புகளில் விரிசல் ஏற்பட்டது.

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தது இந்தியா. எனினும், கனடாவுக்கான இந்தியத் தூதராக அச்சமயம் பொறுப்பு வகித்த சஞ்சய் குமார் வர்மாவை பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புபடுத்த கனடா முயற்சி செய்வதாக இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

மேலும், இந்திய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நாடு திரும்புமாறும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூதர் சஞ்சய் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நாடு திரும்பினர்.

இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றார். அதன் பின்னர் இதுதரப்பு உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஜூன் மாதம், கனடாவில் நடந்த ‘ஜி - 7’ உச்சநிலை மாநாட்டின்போது, பிரதமர் மோடியும் கனடா பிரதமரும் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு தரப்பு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, இருநாட்டுத் துாதரகங்களிலும் துாதர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் கனடாவுக்கான இந்திய துாதர் நியமிக்கப்பட்டார்.

இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி தினேஷ் கே.பட்நாயக் கனடாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு அறிவித்தது.

சீனாவின் பெய்ஜிங், வங்கதேசத்தின் டாக்கா, ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள துாதரகங்களில் தினேஷ் பணியாற்றியுள்ளார். மொராக்கோ, கம்போடியா நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் இவர் இருந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்