புதுடெல்லி: ஒடிசா, மணிப்பூர், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) வெளியிட்டது.
அதில், ஒடிசாவில் மட்டும் 20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் 158,000 வாக்காளர்களும் சிக்கிமில் 37,724 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 30ஆம் தேதி அம்மூன்று மாநிலங்களிலும் ‘எஸ்ஐஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கியது. அந்நடவடிக்கையின் முதற்கட்டமாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள், எதிர்கருத்துகளை முன்வைக்கலாம். மேலும் விடுபட்ட, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம்.
அதன் பின்னர் உரிய விசாரணை, ஆய்வுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2024 வரை ஏறக்குறைய 24 ஆண்டுகள் அம்மாநிலத்தை பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 27 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை என்றும் 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து மாயமாகிவிட்டன என்றும் பிஜு ஜனதாதளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தகவல் பொய்யானது என்றும் எந்தவோர் உண்மையான வாக்காளரின் பெயரும் நீக்கப்படவில்லை என்றும் ஒடிசா மாநில பாஜக தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷியர்கள் உள்ளிட்ட சட்டவிரோதக் குடியேறிகள் வாக்காளர் பட்டியலில் நீடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
இதனிடையே, மணிப்பூரில் தலைமைத் தேர்தல் அதிகாரி அருண் குமார் சின்ஹா வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும், எவராலும் நீக்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

