ஆலப்புழா: தேடி வந்த அதிர்ஷ்டம் சற்று விலகி, மீண்டும் வந்து சேர்ந்த அதிசயம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
அதிர்ஷ்டம் ஆரத்தழுவிய அந்தப் பெண், ஆலப்புழா மாவட்டத்திற்குட்பட்ட எடத்துவா என்னும் இடத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் குஞ்சச்சம்மா.
அம்பலப்புழா - திருவல்லா நெடுஞ்சாலை ஓரத்தில் தமது வாழ்வாதாரத்திற்காக அந்தக் கடையை நடத்தி வரும் அப்பெண் தாளவாடி கிராமத்தில் வசிக்கிறார்.
அண்மையில் காருண்யா லாட்டரிச்சீட்டு இரண்டை அவர் வாங்கி இருந்தார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முடிவுகள் வெளியானபோது ஆவலுடன் தமது சீட்டுகளை எடுத்துப் பார்த்தார்.
அதில் ஒரு சீட்டுக்கு ரூ.5,000 ஆறுதல் பரிசு விழுந்திருந்தது. அத்துடன் ஆறுதல் அடைந்துவிட்ட அந்த மூதாட்டி, சீட்டை கசக்கி கடையிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசினார்.
கடையை மூடிவிட்டு விறுவிறுவென்று வீட்டுக்குச் சென்றார். இரண்டு சீட்டுக்குமா பரிசு விழுந்துவிடப்போகிறது என்ற அலட்சியத்தில் அவர் அந்த இரண்டாவது சீட்டை வீசிவிட்டார்.
ஆனால், முதல் பரிசான 1 கோடி ரூபாய், கசக்கிப் போட்ட சீட்டுக்குத்தான் கிடைத்தது என்பதை அவர் அறியவில்லை. ஆயினும், அந்த இரு சீட்டுகளின் எண்களை அறிந்த அவரது சகோதரர், குஞ்சச்சம்மாவை அழைத்து விவரம் சொன்னார்.
உடனே அந்த மூதாட்டி கடையை நோக்கி ஓடினார். அதற்குள் இரவுநேரமாகிவிட்டது. அவரது சகோதரரும் கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் அந்த இரவில் குப்பைக்கூடையில் சீட்டைத் தேடி எடுத்தனர். அதன் பின்னரே குஞ்சச்சம்மா நிம்மதியடைந்தார். ஒருமுறைக்கு இருமுறை பரிசுச் சீட்டு முடிவுகளோடு அந்தச் சீட்டை ஒப்பிட்டு ரூ.1 கோடி பரிசை உறுதிசெய்தார்.
பெரிய வியாழக்கிழமையன்று அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டி வந்ததாக அந்தப் பெண்ணின் குடும்பம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது.

