நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 300 பில்லியன் டாலர் மதிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் மாபெரும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படும் என அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதையும், அனைத்துலகப் பங்காளிகளுடனான பொருளியல் உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 300 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டெக்சஸ் மாநிலத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த நிலையம் அமைப்பதற்கு இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தத் திட்டம் அமெரிக்காவின் எரிசக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் டெக்சஸின் பிரவுன்ஸ்வில்லில் 50 ஆண்டுகளில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைகிறது.
300 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவரும் இவ்வேளையில், திரு டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

