மும்பை: மரபணுப் பரிசோதனைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது அத்தகைய பரிசோதனைகளுக்குக் குறைந்தது ரூ.10,000 செலவாகிறது. அதை ரூ.1,000க்கு வழங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது.
மரபணு நோய்களைக் கண்டறிதல், நோய்களின் அபாயத்தை மதிப்பிடுதல், சரியான சிகிச்சையைத் தீர்மானித்தல், பரம்பரை நோய்களைத் தடுத்தல் உள்ளிட்டவைகளுக்கு மரபணுப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
மரபணு அறிவியல், சுகாதாரத் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் பெங்களூருவின் ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்ஸஸ் (Strand Life Sciences) நிறுவனம்மூலம் ரிலையன்ஸ் இதை முன்னெடுக்கிறது. 2021ஆம் ஆண்டு ரூ.393 கோடிக்கு அந்நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியது.
ரத்தம், உமிழ்நீர் அல்லது உடல் திசுக்களைப் பயன்படுத்தி மரபணுப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவரின் உடலில் நோய் வரும் ஆபத்து, புற்றுநோய் வளர்ச்சி, தனிப்பட்ட சிகிச்சை திட்டம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இச்சோதனை உதவுகிறது.

