ஸ்ரீநகர்: இந்திய உள்துறை அமைச்சகத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு லே மாவட்டத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க லடாக் துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
2025 செப்டம்பர் 24 அன்று லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது ‘லே அபெக்ஸ் பாடி’ (LAB), ‘கார்கில் ஜனநாயகக் கூட்டணி’ அமைப்புகளின் முக்கியமான கோரிக்கையாக இருந்து வந்தது.
துணை ஆளுநரின் ஒப்புதலின்படி, உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும், கடும் காயமடைந்த 24 பேருக்குத் தலா ரூ.3 லட்சமும் லேசாக காயமடைந்த 20 பேருக்குத் தலா ரூ.1 லட்சமும் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது. இதற்காக யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் மொத்தம் ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போராட்டங்கள், வன்முறைகளின்போது பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க லடாக் யூனியன் பிரதேசத்தில் நிலையான கொள்கை எதுவும் இல்லாத நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இழந்த உயிரையோ அல்லது துயரத்தையோ நிவாரண உதவியால் ஈடு செய்ய முடியாது என்றாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் துணை ஆளுநர் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

