திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நிம்மதி: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நிம்மதி: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

2 mins read
c9a59a45-4d48-4078-ab9a-905f797c8f15
கோல்கத்தா உயர்நீதிமன்றம். - படம்: தினமணி
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் கோல்கத்தா உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி, தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

தேர்தல் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என 800க்கும் மேற்பட்டோரை ‘இடையூறு ஏற்படுத்துபவர்கள்’ எனத் தேர்தல் ஆணையத்தின் காவல் பார்வையாளர்கள் பட்டியலிட்டனர்.

அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஏப்ரல் 21 ஆம் தேதி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவைத் தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞரும் எம்பியுமான கல்யாண் பானர்ஜி வாதிடுகையில், “எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி 800க்கும் மேற்பட்டோர்மீது கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“மக்கள் பிரதிநிதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனிமனிதச் சுதந்திரத்திற்கு எதிரானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையக் காவல் பார்வையாளர்கள் பிறப்பித்த அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக 800 பேர்மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுத்த நீதிமன்றம், தனிப்பட்ட முறையில் யாராவது தவறு செய்தால் அவர்கள்மீது சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதி அளித்துள்ளது.

அந்தத் தீர்ப்பு தேர்தல் நேரத்தில் மேற்கு வங்க அரசியலில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கோல்கத்தாதேர்தல் ஆணையம்திரிணாமூல்தடைகாங்கிரஸ்