புதுடெல்லி: இந்தியாவில் சமய சுதந்திரம் மோசமடைந்து வருவதாக அமெரிக்க அமைப்பு ஒன்று தெரிவித்து இருப்பதற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் சமய சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துக் கண்காணிக்க அனைத்துலக சமய சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) என்ற அமைப்பு உள்ளது.
அந்த அமைப்பு உலக நாடுகளில் சமய சுதந்திரத்தின் நிலவரம் குறித்து ஒவ்வோர் ஆண்டும் அறிக்கை வெளியிடும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டது.
அதில் இந்தியா குறித்துப் பல முக்கிய கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் சமய சுதந்திரம் மோசமடைந்து வருவதால் அதைக் கவனிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதமாற்றத் தடைச் சட்டங்கள், பசு வதைச் சட்டங்கள் போன்ற ஒருதலைப்பட்சமான சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய அரசு பிற சமயத்தவரை ஒடுக்கி, கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பல ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் தன்னிச்சையாக எந்த நடைமுறையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது சமய சுதந்திர மீறலின் உதாரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “அனைத்துலக சமய சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஓர் அரசியல் சார்பு நிலை கொண்ட அமைப்பு.
“தவறான தகவல்கள் மூலம் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரிப்பை உருவாக்க அந்த அமைப்பினர் முயல்கிறார்கள்.
“அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். அவர்கள் முதலில் அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது நல்லது,” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அமைப்பு இந்தியாவின் சமய சுதந்திரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வந்துள்ளது.
தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் ‘உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு’ என்று அதற்குக் காரணம் சொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.